திருமுட்டம் – திருப்புகழ் தல வழிபாடு
1). விருத்தாசலம் – பழமலைநாதர் ஆலயம்
2). விருத்தாசலம் – கொளஞ்சியப்பர் ஆலயம்
3). திருமுட்டம் – பூவராக பெருமாள் ஆலயம்
4). திருமுட்டம் – நித்திலேஸ்வரர் ஆலயம்
5). திருமாறன்பாடி – அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்
முருகப்பெருமானின் திருவருளாலும், அருணகிரி நாதரின் குருவருளாலும் நாம் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, மக்களால் அதிகம் அறியப்படாமல் உள்ள திருப்புகழ் தலங்களில் முருகப்பெருமானுக்கு அபிடேக, ஆராதனை வழிபாடுகள் செய்து வருகிறோம்.
அவ்வகையில் கடந்தாண்டுகளில் 2018-ல் பெரும்பேறு கண்டிகை, 2019-ல் திருநெடியம் மற்றும் ஆகிய திருப்புகழ் தலங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு (2020) திருமுட்டம் பெரியநாயகி உடனமர் நித்திலேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய இறைவன் திருவருள் கூட்டுவித்தான்.
என்றும் தந்நாவில் திருவைந்தெழுத்தை நவில மறவா சீரடியார் சுமார் 80 பேர் கொண்ட திருக்கூட்டம் ஒரு பேருந்து மற்றும் ஒரு சிற்றுந்தில் தென்னாடுடைய சிவனையும், முருகப் பெருமானையும் போற்றிப் புறப்பட்டு ஜனவரி 5, 2020 அன்று அதிகாலை 2:30 மணியளவில் பழமலை நாதரும், விருத்தாம்பிகையும் அருளாட்சி புரியும் விருத்தாசலத்தை அடைந்து ஆனந்தா சத்திரம் முன் நின்றது. அடியார்கள் வாகனங்களிலிருந்து இறங்கி சத்திரத்தை அடைந்து சிறிது சிரமபரிகாரம் செய்து கொண்டனர்.
அதிகாலை எழுந்து அருட்புனலாடி, வீடுபேறளிக்கும் நீறணிந்து தயாராகினர் அடியார்கள். தென்னாடுடைய சிவனையும், அனைவருக்கும் அருள்வழங்கும் முருகப்பெருமானின் வேலையும் போற்றி, அன்றைய வழிபாட்டு நிகழ்ச்சி நிரல் திரு.சுரேஷ் பிரியன் அவர்களால் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தயாராக இருந்த வாகனங்களில் புறப்பட்டு அன்பர்கள் அனைவரும் பழமலை நாதர் ஆலயத்தை அடைந்தனர். அவ்வாலயத்தின் முகப்பில் அருள்தரும் ஆனைமுகப் பிரானை வணங்கி ஆலயத்துள் அணைந்தனர். அங்கு, சீர்பரவும் அடியார்கள் சிந்தை குளிர காட்சி தந்தனர் பழமலை நாதரும், பாலாம்பிகையும், பெரிய நாயகியும். இறைவன் கழலே நின்றேத்தும் அடியார்கள் அகங்குளிர அருட்காட்சி கண்டு, வாயாரப்பாடி மனமாரத் தொழுது ஆலய வலம் வந்ததும் அவர்களுக்கு காலைத் தேநீர் வழங்கப் பட்டது.
காலை 8:௦௦ மணி
இதுஒருபுறமிருக்க, கடமையேகண்ணாகக்கொண்டநம்குழு ஒருங்கிணைப்பாளர்களும், அடியார்கள்சிலரும்பூவராகப்பெருமாளைதரிசிப்பதையும்விடுத்து,பேருந்திலிருந்துஅனைத்துஅபிடேகபொருட்களையும்எடுத்துஆலயத்துள்கொண்டுசேர்க்கும்பணியில்ஈடுபட்டனர்.
நித்திலேஸ்வரர் ஆலயம் மிகப் பெரிய திருக்குளத்துடன் விளங்குகிறது. இவ்வாலயத்தில் பின்புறம் தனிசந்நிதியில் நம் விழாநாயகரான முருகப்பெருமான் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்று அருளாட்சிபுரிகிறான். அன்பிற்சிறந்த அடியார்கள் வந்ததும் சிறுகுழுக்களாய் அமைந்து பூதொடுத்தல், அபிடேகத்திற்கு பழங்களைத் தயார் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஒருபுறம் அருணகிரிநாதரின் திருவுருவப்படத்திற்கு அடியார்கள் அலங்காரம் செய்ய, மறுபுறம் நம் ஓதுவார் ஐயாஅவர்கள் தன் தீங்குரலில் தேனான திருப்புகழ் பாடல்களைப்பாடி முருகனையும், அடியார்களையும் மகிழ்வித்தார்.
சிவாச்சாரியார்கள் இருவரும் அடியார்களை வரவேற்று, அழகன் முருகனுக்கு தைலக்காப்பு சாத்தி, பின் அபிடேகம் செய்ய ஆரம்பித்ததும், அடியார்களின் மனம் ஆனந்தத்தில் திளைத்தது. காதுக்கு விருந்தாக திருப்புகழ் பாடல்களும், கண்களுக்கு விருந்தாக மிக்க நேர்த்தியாக நடைபெற்ற அபிடேக காட்சிகளும் அமைந்தன. ஒருபுறம் அபிடேகம் முடிந்து முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் அன்பர்கள் அனைவரும் அம்மையப்பரை வணங்கும் பொருட்டு ஆலய முன்புறம் வந்து முதற்கடவுளாம் விநாயகர், நித்திலேஸ்வரர், அம்பாள் சந்நிதிகளில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பின்னர் குமரக்கடவுளுக்கு, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்புரிந்த அழகனின் அழகைக் கண்டு மகிழ அனைத்து அன்பர்களுக்கும் இரண்டு கண்கள் போதவில்லை. அடியார்களின் அரகர கோஷத்துடன் குமரனுக்கு சோடச வழிபாடு நடைபெற்று, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் வழிபாட்டினை செவ்வனே நடத்திக்கொடுத்த இருசிவாச்சாரியார்களுக்கும் நன்றி கூறும் விதமாக நம் குழுவின்சார்பாக வஸ்திரமும், சம்பாவனையும் வழங்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக, 2019 ம் ஆண்டு திருக்கயிலாய யாத்திரை மேற்கொண்ட நம் குழு அன்பர்களான திருமதி.ரேவதி, திரு.கண்ணன், திருமதி.யமுனாகண்ணன், திரு.ஜெயவேல், திருமதி.ராஜேஸ்வரி, திருமதி.மீனாட்சி, திருமதி.மல்லிகா ஆகியோருக்கு குழுவின் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடியார்களுக்கு நம்குழு இலச்சினையுடன் கூடிய திருநொடித்தான் மலைகண்ட திருத்தொண்டர் என்று பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. நம் அழைப்பின் பேரில் அன்புடன் கலந்துகொண்ட ஓதுவாமூர்த்திகளுக்கும் சிறப்புசெய்யப்பட்டது.
வழிபாடும், நிகழ்ச்சிகளும் முடிந்ததும் நம் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான திரு.பாலாஜி மற்றும் திரு.தனஞ்செழியன் ஆகியோர் அன்னம் பாலிப்புக்கு ஏற்பாடுசெய்தனர். தம் குழந்தைகள் பசியாறும் பொருட்டு அன்னைதன் ஆலய முன்புற மண்டபத்தில் இடம்கொடுத்தாள். அடியார்கள் உணவருந்திய பின் சிறப்பு நிகழ்வாக, 2020ம் ஆண்டுக்கான நமது "நால்வரின்பாதையில்" மாத காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அனைவருக்கும் காலண்டர் வழங்கப்பட்டது
மாலை 4:30 மணி
சிறிது ஓய்வுக்குப் பின் அடியார்கள் ஆண்டவனின் ஆணை பெற்று, நம்பிரான் திருஞானசம்பந்தருக்கு எம்பிரான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் வழங்கிய திருமாறன்பாடி தலத்தை அடையும் பொருட்டு வாகனங்களில் கிளம்பினர். திருமாறன்பாடியை அணைந்த அடியார்கள், சிவபெருமானையும், அம்மையையும் கண்டு அன்புள்ளம் உருக வழிபட்டு மகிழ்ந்தனர். பின்பு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
மாலை 8:௦௦ மணி
புத்துணர்வு
கொண்ட அடியார்கள் பின் புறப்பட்டு வாலிகண்டாபுரம் திருப்புகழ் தலத்தை அடைந்தனர்.
அன்பர்கள் தன்னைக் காண சிறிது கால தாமதமாக வந்ததாலோ என்னவோ, முருகப்பிரான் அடுத்தமுறை
வந்து தன் தரிசனம் பெற்றுக்கொள்ள ஆணையிட்டான். ஆலயத்தின் கதவுகள் மூடியிருந்தாலும்
வசந்த மண்டபத்தில் அடியார்களுக்கு அமுதுண்ண இடம் கொடுத்தான்.
நமது குழு
அன்பர் திருமதி.ரேணுகா மனோகரன் அவர்களின் முயற்சியால் பெரம்பலூரைச் சேர்ந்த
அன்பர்கள் அடியார்களின் அன்னம்பாலிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். வசந்த
மண்டபத்தில் போதிய விளக்கொளி இல்லாததால் பெரம்பலூர் அன்பர்களின் மகிழ்வுந்து
முன்விளக்கு ஒளியே அனைவரும் உணவருந்த உதவியது. அனைவருக்கும் அன்னம்பாலிப்பு செய்த
பெரம்பலூர் அன்பர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, நம் ஒதுவா மூர்த்திகள் அவர்களை
திருப்பதிகங்கள் பாடி வாழ்த்தினார். அவர்களிடம் அன்புடன் விடைபெற்றும்,
முருகப்பிரானிடம் அடுத்தமுறையாவது எங்களுக்கு உன் தரிசனம் கிடைக்க அருள்செய் என்று
மானசீகமாக வேண்டிக்கொண்டும் அடியார்கள் வாகனங்களில் சென்னையை நோக்கி புறப்பட்டனர்.
ஆங்கிலப்
புத்தாண்டை இறைவன் அருளுடன் தொடங்கிவிட்டோம் என்ற மகிழ்வுடனும், எல்லாம் வல்ல
ஆடல்வல்லப் பெருமானின் பெருங்கருணையுடனும், ஜனவரி,6, 2020 அன்று அதிகாலை அன்பர்கள் சென்னையை அடைந்து தத்தம் இல்லம்
ஏகினர். 2020 ஆம் ஆண்டு
திருப்புகழ் தல வழிபாடு இனிதே நிறைவுற்றது.
0 comments:
Post a Comment