கோச்செங்கணார் எழுப்பிய யானை புகா மாடக்கோயில்களை கண்டெடுக்கும் ஓர் பயணம்
அன்புடையீர்வணக்கம்,
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த பணியினை ஆடல்வல்லானின்
திருவருளுடன் துவங்கினோம்....
இன்று
2020 ஆம் ஆண்டு இந்த தேடல் பணி நிறைவுறும் தருவாயிலுள்ளது. எம்பெருமானே இந்த
பயணங்களில் கூடவே வந்திருந்தும், வழிகாட்டியும், தெளிவு ஊட்டியும் திருவிளையாடல்
செய்தருளினார் என்பதே மனதிற்கினிய உண்மை.
கோச்செங்கட்ச் சோழனை நமக்கு அடியாராய்க் காட்டிய பெருமை நம்பி
ஆருரையையே சாரும். "தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்" என்ற
திருத்தொண்டர் புராண வரிகள் வாயிலாக. மேலும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம்
வாயிலாக சோழனாரின் தாய் தந்தை கமலதேவி மற்றும் சுபதேவர் என அறிகின்றோம்.
மேலும் ஆளுடை பிள்ளை, அப்பர் ஸ்வாமிகள், சுந்தரர் பதிகங்களின்
வாயிலாக யானை புகா மாடக்கோயில்கள் அல்லது பெரும்திருக்கோயில்கள் பல எழுப்பித்து
செங்கணார் செய்த திருத்தொண்டு நமக்கு புலனாகின்றது...
ஆயினும்
அப்பர் சுவாமிகள் வாக்கில் அடைவு திருத்தாண்டகத்தில் எழுபத்தெட்டு
பெரும்திருக்கோயில்கள் கோச்செங்கட்ச் சோழனார் தான் எழுப்பியது என திண்ணமாக
கூறப்படவில்லை.
சுந்தரர் மட்டும் நன்னிலத்து பெரும்திருக்கோயில் செங்கணார்
எழுப்பியது என்று "கோடுயர்
வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்து பெருங்கோயில்
நயந்தவனை" என்ற பதிக வரிகள் மூலம் நமக்கு தெளிவுறச்செய்கின்றார்.
இந்த தலங்களை பட்டியலிட்டு யாரும் பாடல்களாக வடிக்கவில்லை..
அதன் அமைப்பைக்கொண்டே கண்டுகொள்ளமுடிகின்றது. பல தலங்கள் காலத்தின் பிடியில்
சிக்கி மாடக்கோவில் அமைப்பை இழந்துவிட்டது.. ஆயினும் அங்கே கிடைக்கப்பெற்ற
கல்வெட்டுகள், ஊர் புராணங்கள், நிவந்தங்கள் கொண்டு மாடக்கோவில்கள் அமைப்பில்
திருக்கோயில்கள் இருந்தன என்ற செய்தி புலனாகின்றது.
இந்த பெருமையை போற்றும் விதமாக திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி திருநறையூர் பாசுரத்தில் பத்து பாசுரத்தில் நாற்பது வரிகளில்
கோச்செங்கட்ச் சோழனாரின் திறம் வியந்து பாடி உள்ளார். அதுமட்டுமா செங்கணார் சமைத்த
கோயிலுக்கு வாருங்கள் வாருங்கள் என கூவி அழைக்கின்றார்.
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த
கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செழும்பொன்னி
வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தெய்வவாள்
வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செங்கணான்
கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தென்
தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தென்னாடன்
குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
சிலைத்தடக்கைக்
குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
திருக்குலத்து
வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
தேராளன்
கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
செம்மொழிவாய்
நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பரமேஸ்வர விண்ணகரத்தை கட்டிய பரம வைஷ்ணவனாகிய பல்லவனையே இரண்டே
வரிகளில் குறிப்பிடுகின்றார் ஆனால் நம் நாயன்மாரையோ பத்து பாசுர பாடல்களில் வைத்து
புகழ்ந்து பாடியுள்ளார் திரு மங்கை ஆழவார்...
என்னே செங்கணாரின் அன்பு.... என்னே ஆழ்வாரின் பண்பு...
பெரியபுராணம் வாயிலாக கோச்செங்கட்ச்சோழனாரின் தாய் தந்தை -
கமலவல்லி சுபதேவன், என்று வடமொழி பெயராக இருக்கின்றதே என்ற குழப்பம் வருகின்றது..
வட மொழி கலப்பு உண்டு என்பதை "வடபுலக்கோன்" என்ற ஆழவாரின் சொற்கள்
நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
மேலும் சோழனார் தில்லையில் மறையவர்களுக்கு மாளிகைகளும், பல
சமயத் தொண்டுகளும் நெடுநாள் ஆற்றி தில்லை கூத்தனின் திருவடிகளை அடைந்தார் என
பெரியபுராணம் நமக்கு காட்டுகின்றது.
சைவத்திற்கும்,
வைணவத்திற்கும் பெரும் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற கோட்செங்கட்ச்சோழனாரின்
திருவடிகளை வணங்கி நாமும் அவர் எழுப்பிய யானை புகா மாடக்கோவில்களை வழிபட்டு
மகிழ்வோம்.
இன்றைய காலகட்டத்தில் நமக்கு 50 சைவ திருத்தலங்களும், 3 வைணவ
திருத்தலங்களும் தரிசித்து வழிபட புலப்படுகின்றன. இத்தலங்களை விரைவில்
வரையறுக்கப்பட்ட திருத்தல யாத்திரை பகுப்பாக யாத்திரை பயண திட்டம் வெளியிடப்படும்
என்பதை அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
ஓர்குழுவாக அடியார்திருக்கூட்டத்தினர் யாத்திரைமேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செவ்வனேசெய்துதரப்படும்.
திருச்சிற்றம்பலம்
அன்புடன்,
என்றும்சைவநெறியில்
அடியார்க்கும்அடியேன்சைதைசு. சுரேஷ்பிரியன்
நிறுவனர்&தலைவர் --- "நால்வரின்பாதையில்...."
276 திருமுறைபாடல்பெற்றதிருத்தலயாத்திரைகுழு
திருகாரணீச்சரம், சைதாப்பேட்டை, சென்னை -600 015
0 comments:
Post a Comment